மானாமதுரை அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் விபத்து அபாயம்

மானாமதுரை: மானாமதுரையில் இருந்து கீழமேல்குடி கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து கீழமேல்குடி கிராமத்திற்கு தார்ரோடு செல்கிறது. மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழமேல்குடி கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு நான்குவழிச்சாலை விலக்கு ரோட்டில் இருந்து மின்சாரம் செல்கிறது.

புதிதாக உருவாகியுள்ள செந்தமிழ் நகரை கடந்து செல்லும் ரோட்டில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் லாரிகள், பள்ளி பேருந்துகள் மீது உரசும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தர்மா கூறுகையில், ‘எங்கள் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்சாரம் செல்லும் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. விறகு, கரி மூட்டத்தில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளும், கட்டுமான தொழில்களுக்கு செல்லும் லாரிகளும் மின்கம்பி தொங்கும் பகுதியை தவிர்த்து விலகி செல்கின்றன. கம்பி தாழ்வாக தொங்குவது தெரியாமல் வெளியூர் வாகனங்கள் இரவு நேரங்களில் வந்தால் மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பலி ஏற்படுவது நிச்சயம். மின்வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: