செக்யூரிட்டி நிறுவனம் நடத்துவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது: பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

வேளச்சேரி: மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசார் தனிப்படை அமைத்து சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவருடைய பைக் பதிவு எண் சிக்கியது. அதை வைத்து விசாரித்தபோது, சித்தாலப்பாக்கம், ஸ்கைலாப் அவென்யூ, அமுதம் ஐஸ்வர்யா குடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜேஷ் (35) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertising
Advertising

நேற்று முன்தினம்  அவரை கைது செய்தனர். விசாரணையில், இவர் ஏற்கனவே கடந்த 2015ல் திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், 6 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்ததும், பின்னர் டைமன் செக்யூரிட்டி பீரோ என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 42 பேர் வேலை செய்வதாகவும், இவர்களை கண்காணிக்க பைக்கில் செல்வதாக கூறி சித்தாலப்பாக்கம் பகுதியில் மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 சவரன் தங்க செயின்கள், 600 மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் போலி செக்யூரிட்டி நிறுவனத்தை தடை செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: