மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மடப்பள்ளியில் அமைகிறது இலவச லட்டு தயாரிப்புக்கூடம்: தீபாவளி முதல் வழங்கப்படும்

மதுரை: மதுரைமீனாட்சியம்மன் கோயிலில் வரும் தீபாவளி (அக்.27) முதல் அதிகாலை கோயில் நடை திறந்தது முதல், இரவு நடை சாத்தப்படும் வரையிலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. லட்டு தயாரிப்புக்காக ரூ.5 லட்சம் செலவில் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகளை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. அரசு அனுமதி பெறப்பட்டு, தமிழகத்தின் அறநிலையத்துறை கோயில்களில் முதல் கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் அம்மன் சன்னதியில் மீனாட்சியம்மனை தரிசித்து, சுந்தரேஸ்வரரைக் காண படி இறங்கும்போதே கைகளில் இந்த லட்டு தரப்படும்.

ஏற்கனவே மீனாட்சியம்மன் கோயில் பிரசாத ஸ்டாலில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், முறுக்கு, அப்பம், புட்டு போன்றவற்றுடன் லட்டும் பிரசாதமாக விற்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதல் சுவையில், அதிக பொருட்கள் சேர்ப்பில் லட்டு தயாராகிறது. கோயிலின் தெற்காடி வீதியில் வன்னிமரத்தடி பிள்ளையார் சன்னதிக்கு அருகில் உள்ள மடப்பள்ளியில்தான், லட்டு தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான பணிகளை இப்போதே வேகப்படுத்தியுள்ளனர். இங்கு சிறப்பு சமையல்கூடமும் தயாராகிறது.

கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தினம் 25 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். தற்போதைக்கு 50 கிராம் எடைக்குள் லட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் ஏற்கனவே தரிசனத்திற்கு வருவோருக்கு இலவச லட்டு வழங்கப்படுவதால், அங்குள்ள நிர்வாக நிலையையும் மீனாட்சி கோயில் நிர்வாகத்தினர் அறிந்துள்ளனர். திருப்பதி கோயிலில் விழாக்காலங்களில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ அதிகம் சேர்த்து தயாரித்து, விஐபிகளுக்கு வழங்கும் ‘ஆஸ்தான லட்டு’, திருமண விழாக்களில் பங்கேற்பவர்களுக்கு வழங்கும் ‘கல்யாண உற்சவ லட்டு’ வரிசையில், பொதுவான பக்தர்களுக்காக ‘புரோகிதம் லட்டு’ என மூவகை லட்டு வழங்கப்படுகிறது. மதுரையில் ஒரே வகை லட்டு வழங்கப்பட்ட போதும், திருவிழா காலத்தில் சிறப்பு தயாரிப்பு லட்டுகள் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: