ஆதார் அட்டை எடுக்க எம்பி, எம்எல்ஏ கடிதத்தை சான்றாக பயன்படுத்தலாம் : மத்திய அரசு புதிய அறிவிப்பு

நாகர்கோவில்: எம்.பி எம்.எல்.ஏ, நகராட்சி வார்டு கவுன்சிலர் கடிதங்களை ஆதார் அட்டை எடுக்க பயன்படுத்தும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு கூடுதல் துணை ஆவணங்களின் பயன்பாட்டில் திருத்தங்களை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு பல்வேறு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை விண்ணப்பித்தலுக்கான துணை ஆவணங்கள் பட்டியல் புதுப்பித்து இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (uidai) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐடென்டிட்டி புரூப் என்ற பட்டியலில் தற்போது எம்.பி, எம்.எல்.ஏ.,க்களின் மற்றும் நகராட்சி கவுன்சிலர்களின் லெட்டர் பேடில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டோவுடன் கூடிய ஜாதி சான்றிதழ், போட்டோ ஒட்டிய பாங்க் பாஸ்புக் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் புதிதாக சேர்த்து இதில் மொத்தம் 31 ஆவணங்களை பயன்படுத்திடலாம் என்று தெரிவித்துள்ளது.

இதனை போன்று பள்ளிகளில் இருந்து வழங்கப்படும் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை, போட்டோ ஒட்டிய எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல், திருமண பதிவு சான்று ஆகியவை உட்பட 10 சான்றுகள் முகவரி சான்றாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முகவரி சான்றாக மொத்தம் 44 ஆவணங்களை பயன்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.  உறவு முறையை தெரிவிக்க அரசு மருத்துவமனையில் இருந்து வழங்கப்படுகின்ற டிஸ்சார்ஜ் அட்டை, எம்பி எம்எல்ஏ நகராட்சி கவுன்சிலர், கெசட்டட் அதிகாரி வழங்குகின்ற அடையாள சான்று போன்றவற்றை பயன்படுத்தலாம். இதற்கு மொத்தம் ஆவணங்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை போன்று பிறந்த தேதியை நிரூபிக்க பான்கார்டு, கல்வி வாரியம், பல்கலைக்கழகம் வழங்குகின்ற மதிப்பெண் பட்டியல், அரசு ஓய்வூதியர் அடையாள அட்டை ஆகியவை உட்பட 10 ஆவணங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆவணங்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணங்களின் அசல் மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். ஜெராக்ஸ் காப்பி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் உடன் திரும்ப வழங்கப்படும் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: