எஸ்சி, எஸ்டி சட்ட தீர்ப்பை திருத்தக் கோரும் மத்திய அரசின் சீராய்வு மனு 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்குத் தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி தீர்ப்பளித்தது. இது இச்சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்து விடும் என பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம் பெறச் செய்ய வழிவகுக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி மனுவும் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  கடந்த மே 1ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தீர்ப்பு வழங்கும் வரை எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த மசோதாவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முந்தைய தீர்ப்பில் ஏதேனும் பிழை இருந்தால், சீராய்வு மனு விசாரணையில் அது சரி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. அதில், ‘எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அடுத்த வாரம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வழக்கு மாற்றப்படும்,’ என உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: