வேலைவாய்ப்புகோரி பேரணி மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீது தடியடி

ஹவுரா: வேலைவாய்ப்பு கோரி சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பும், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினரும் இணைந்து சிங்கூரில் இருந்து தலைமை செயலகத்தை நோக்கி 2 நாள் பேரணி நடத்தினர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி அரசை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பேரணி, நேற்று சட்டப்பேரவை கட்டிடத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார், பேரணி நடத்தியவர்களை எச்சரித்தனர்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் திடீரென கற்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசினர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து, ஊர்வலமாக சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் போலீசாரும், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த பலரும்  காயம் அடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: