நள்ளிரவில் ஜீப்பில் இருந்து குழந்தை விழுந்த விவகாரம்: பெற்றோர் மீது குழந்தைகள் நல ஆணையம் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள கம்பிளிகண்டம் பகுதியை சேர்ந்தவர்  சபீஷ். இவரது மனைவி சத்யபாமா. இவர்களுக்கு ேராகிதா என்ற 13 மாத குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீப்பில் பழனி சென்றனர். தரிசனம் முடித்து 7ம்தேதி இரவு கம்பிளிக்கண்டம் பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். மூணாறு அருகே ராஜமலை வனத்துறை சோதனை சாவடி அருகே ஜீப் வந்து கொண்டிருந்தபோது, சத்யபாமா மடியில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. இதை தாயார் உட்பட யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அந்த குழந்தை சோதனை சாவடியில் இருந்த வெளிச்சத்தை பார்த்து அங்கு செல்ல தொடங்கியது.

நள்ளிரவில் குழந்தை தவழ்ந்து வருவதை கண்ட வனத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை சாவடி அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது அவ்வழியாக சென்ற ஜீப்பில் இருந்து குழந்தை தவறிவிழும் காட்சி பதிவாகி இருந்தது. இதற்கிடையே சுமார் 40 கிமீ தூரம் சென்ற பின்னரே குழந்தை ஜீப்பில் இல்லாதது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மூணாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் விரைந்து சென்று குழந்தையை கட்டி அணைத்தனர். இந்நிலையில்  இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மீது மூணாறு போலீசும்,குழந்தைகள் நல ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: