ஜம்முவில் வீட்டுக்காவலில் இருந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தாரிகமி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தாரிகமி உடல்நிலை மோசமானதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த மாதம் 5ம் தேதி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதோடு, அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தாரிகமியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அவரை மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேரில் சந்தித்தார். தாரிகமி உடல்நிலை குறித்த அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் சட்டவிரோதமாக தாரிகமி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்தார். கடந்த வியாழன்று மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாரிகமியை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை தாரிகமி ஸ்ரீநகரில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: