சந்திரனை சென்றடையும் இந்தியாவின் கனவை இஸ்ரோ நனவாக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மும்பை: ‘‘சந்திரனை அடையும் நமது நாட்டின் கனவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நனவாக்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பிரதமர் மோடி நேற்று அதிகாலை சந்திரயான்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியின்போது சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சந்திரனை அடையும் இந்தியாவின் கனவை இஸ்ரோ நனவாக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியம் மற்றும் மன உறுதி என்னை வியப்படையச் செய்தது. கடுமையான சவால்களையும் பொருட்படுத்தாது இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என்பதை நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.சந்திரனை அடைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் நோக்கத்தை சென்றடையும் வரையில் ஓயமாட்டார்கள்.இவ்வாறு பிரதமர் கூறினார்.

Related Stories: