திகார் சிறையில் ப.சிதம்பரம் கடும் விரக்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களை கூட சந்திக்க மறுப்பு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விரக்தியில் உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்களை கூட அவர் சந்திக்க மறுப்பு தெரிவித்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு விவகாரத்தில் 15 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த   நிலையில் நேற்று முன்தினம் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் உடனடியாக திகாரில் உள்ள 7வது சிறை அறையில் அடைக்கப்பட்டார். இதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் காலை எழுந்த ப.சிதம்பரம் அமைதியாகவே காணப்பட்டுள்ளார். குறிப்பாக அவருக்காக இருக்கும் இசட் பிரிவு பாதுகாவலர்கள், சிறைத்துறை அதிகாரிகள் என யாரிடதிலும் எதையும் கேட்கவில்லை.

முதல் வகுப்பு என்பதால் காலை உணவாக கஞ்சி மட்டும் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. அதில் சிறிதளவு மட்டுமே அவர் எடுத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கே பிடித்த தேனீரை மட்டும் இரண்டு தடவைக்கு மேல் அதிகாரிகளிடம் கேட்டு வாங்கி குடித்துள்ளார்.  ப.சிதம்பரம் முழு விரக்தியுடனும், மன அழுத்தத்துடன் மட்டுமே இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தை பார்க்க அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று காலை திகார் சிறைக்கு சென்றனர். ஆனால் கார்த்தி மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்ட அவர் தந்தை ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார்.  

 அப்போது இருவருமே உணர்ச்சி வசப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கில் அடுத்தக்கட்டமாக என்ன மாதிரியான சட்ட ஆலோசனைகளை மேற்கொள்வது, ஜாமீன் மனு தாக்கல் செய்வது, அமலாக்கத்துறை ஒருவேளை காவலில் எடுக்க நேர்ந்தால் அதனை எப்படி சமாளிப்பது ஆகியவை குறித்து தீவிர ஆலோசனையில் மேற்கொண்டுள்ளனர். கார்த்தி சிதம்பரம் தனது தந்தை வழக்கமாக உடுத்தும் பகல் மற்றும் இரவு நேர உடைகள், அன்றாட தேவைக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்று கொடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாசினிக், மூத்த தலைவர்களான மாணிக்கம் தாகூர், பி.சி.சாக்கோ  உள்ளிட்டோர் நேற்று ப.சிதம்பரத்தை சந்திக்க திகார் சிறைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் யாருக்கும் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.  

சோனியா விசாரிப்பு

ப.சிதம்பரத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி நேற்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். தமக்கு வருத்தத்தை அளித்துள்ளது; ப.சிதம்பரத்திடம் தனது ஆறுதலை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து ப.சிதம்பரத்தை பார்த்து விட்டு திரும்பிய கார்த்தி தற்போதைய சூழல் குறித்து மீண்டும் சோனியா காந்தியை தொடர்பு கொண்டு விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கொஞ்சம் மரியாதை அளித்து இருக்கலாம்’

திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டது பற்றி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், சிதம்பரம் வழக்கில் என்ன விவரங்கள் அடங்கியிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவரை சாதாரண கைதிகளை போல திகார் சிறையில் அடைப்பதற்கான நோக்கம் என்ன? மத்திய அரசு குறைந்தபட்ச மரியாதையையாவது அவருக்கு அளித்திருக்க வேண்டும், என்றார்.

5 பேருக்கு மட்டும் அனுமதி

இதில் சிறையில் இருக்கும் நான் 5பேரை மட்டும் தான் சந்தித்து பேச விரும்புகிறேன். வேறு யார் வந்தாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் உள்ள விட வேண்டாம். ஏனெனில் நான் இருக்கும் நிலமையில் பலரையும் சந்திக்க விரும்பவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கொடுத்துள்ள பெயர் பட்டியலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட ஐவரின் பெயர்கள் மட்டும் உள்ளது. மேலும் அவரது மனைவி நளினி பெயர் கூட அதில் குறிப்பிடவில்லை என சிறைத்துறை வட்டாரத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: