பெரும்பான்மை மக்களான இந்துக்களின் விருப்பப்படிதான் மகாராஷ்டிரா அரசு செயல்படும்: மாநில அமைச்சர் சர்ச்சை பேச்சு

புனே: பெரும்பான்மையான இந்துக்களின் விருப்பப்படிதான் அரசு செயல்படும் என்று மகாராஷ்டிரா மாநில வருவாய்த்துறை அமைச்சரும் மாநில பாஜ தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.புனேயில் தேசிய கணபதி விழா நடந்தது. இந்த விழாவில் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பேசுகையில், ‘‘கணபதி விழாவில் இரவு 12 மணிக்கு நாடகம் பார்க்க வேண்டும் என்று பெரும்பான்மை  இந்துக்கள் விரும்பினால் அந்த விருப்பம் நிறைவேற்றப்படும். ஆட்சியாளர்களும் இந்துக்கள்தான். அவர்களும் குடும்பத்தினருடன் கணபதி விழாவை கொண்டாடுகிறார்கள். எனவே ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுப்பதாக யாரும் தவறாக நினைக்க கூடாது’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் கோலாப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க சென்றபோதும் சந்திரகாந்த் பாட்டீல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். கோலாப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் குறைகளை பற்றி அமைச்சரிடம் எடுத்து  சொல்ல முயன்றபோது, அமைச்சர் அவரிடம் கோபப்பட்டார். “தேவையில்லாமல் கூச்சலிடாதீர்கள். உங்களுக்கு பிரச்னை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். அதை முறையாக கேட்க வேண்டும்” என்று கூறி அவரை பேசவிடாமல்  செய்துவிட்டார்.

Related Stories: