திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்து மாயம் ஆட்டோவில் பயணித்த குற்றவாளியை போலீசில் சிக்கவைத்த டிரைவர்

பெரம்பலூர்: திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு பஸ்சில் இருந்து சுமார் 40வயதுடைய ஒருவர் இறங்கினார். லாட்ஜிக்கு செல்வதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் வந்தார். அங்கிருந்து ஆட்டோ டிரைவர் முருகய்யா (42) என்பவரிடம், வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு போக வேண்டும் என்றார். உடனே, அவரும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். அவரிடமிருந்த பையில் கத்தை கத்தையாக பணம் வெளியே தெரிந்தது. இதனால் அந்தநபர் கொள்ளைக்காரராக இருக்கலாம் என ஆட்டோ டிரைவர் கருதினார். எனவே, நேராக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போதும், போலீஸ் ஸ்டேஷன் என்பதைகூட அந்த பயணி அறியவில்லை. இதன்பின், போலீஸ் நிலையம் உள்ளே ஆட்டோ டிரைவர் சென்று இன்ஸ்பெக்டர் அழகேசனிடம், தகவல் தெரிவித்தார். அவர் வெளியே வந்து ஆட்டோவில் இருந்த பயணியை உள்ளே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (41) என்றும், பையில் திருச்சியில் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணம் இருப்பதாகவும் உளறினார்.

இதன்பின், போலீசார் பையை திறந்து பார்த்தனர். அதில்,  ₹12 லட்சத்து 97 ஆயிரம் இருந்தது. தொடர் விசாரணையில், கடந்த  20ம் தேதி திருச்சியில் ஒரு வங்கியில் ₹16 லட்சம் கொள்ளையடித்தவன் என்பதும் அந்த பணத்தை வைத்து மதுஅருந்தி சுற்றி வந்ததும் தெரியந்தது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பயணியையும், பணத்தையும் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்துக்கு இரவோடு இரவாக அனுப்பி வைத்தனர். அங்கு, போலீசார் விசாரித்தபோது,  திருச்சி வங்கியில் ₹16 லட்சத்தை இவன்தான் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் தேடி வந்தவேளையில், ஆட்டோ டிரைவர் முருகய்யாவின் துணிச்சலான நடவடிக்கையால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவன் போலீசில் பிடிபட்டதை எண்ணி போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அந்த ஆட்டோ டிரைவரை கோட்டை போலீசார் பாராட்டினர். பின்னர், வழக்கு பதிந்து ஸ்டீபனை கைது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: