ரூ.36 கோடி மதிப்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயம்

திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி மதிப்பில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நவீன மயமாகிறது. இதற்காக பூமி பூழை விழா நேற்று நடந்தது.  திருப்பூர் மாநகராட்சியில், மாநகர் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே உள்ளது.

 இந்நிலையில், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.36 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் மறு சீரமைப்பு செய்து, புதிதாக கட்டப்படுகிறது. மேலும் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடமும் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். மாநகராட்சி உதவி ஆணையர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.

 புதிதாக அமையவுள்ள திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் அமைக்கப்படுகிறது. பிறைநிலா வடிவில் வளைவாக அமைக்கப்படும் வணிக வளாகமும், பஸ்கள் அதை சுற்றிச்செல்லும் வண்ணம் அமைக்கப்படுகிறது. பஸ்கள் நிறுத்த அதைச்சுற்றிலும் ரேக்குகள், சர்வதேச தரத்துக்கான தளம், மின் விளக்கு வசதிகள், கழிப்பறைகள், ஓய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், பயணிகளுக்கான பொருட்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம், நவீன வடிவமைப்பில் நுழைவாயில், கண்கவர் அலங்கார விளக்குகள் போன்ற சிறப்பான வசதிகள் செய்யப்படுகின்றன.

 இந்த பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நின்று செல்வதை அறிவிக்கும் வசதி, பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்வசதிக்காக சோலார் விளக்குகள் பொருத்தப்படுகிறது. இத்துடன் பஸ் ஸ்டாண்டில் புல் தரை, போக்குவரத்து திட்டுகளில் பூச்செடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உலகத்தரத்துக்கான நவீன வசதிகள் செய்யப்படுகிறது.  

பூமி பூஜை நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து, மற்றும் காவல்துறையின் ஆலோசனையை படி, தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் துவக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் முனியாண்டி, சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், தங்கராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: