சிறுமலையில் ரூ.5 கோடியில் அமையவுள்ள பல்லுயிர் பூங்காவில் சிறுத்தைகள் விட திட்டம்

திண்டுக்கல்: சிறுமலையில் ரூ.5 கோடியில் அமையவுள்ள பல்லுயிர் பூங்காவில் சிறுத்தைகள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 120 ஏக்கரில் 100 வகை மூலிகை செடிகள் வளர்க்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுமலை அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் சிறுமலையில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க எந்த இடம் இல்லாததாலும், இங்குள்ள படகுத்துறை செயல்படாமல் இருப்பதாலும், தங்குவதற்கு சரியான விடுதிகள் வசதி இல்லாததாலும் பயணிகள் அதிகளவு வருவதில்லை. சிறுமலை 800 அடி உயரத்தில் உள்ளது. இங்கு செல்ல 13 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது வளமான பல்லுயிர் வகை காட்டை சேர்ந்தது. அதே நேரத்தில் நடுமலைப்பகுதியில் வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. மா, பலா, வாழை, காபி தோட்டங்கள், பழத்தோட்டங்கள், காய்கறி பயிரிடப்படுகிறது.

Advertising
Advertising

மூலிகை திருட்டு: இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. இதை சென்னை சித்தா கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்தனர். வெப்பமண்டலமாக இருப்பதால் மூலிகை செடிகளின் சொர்க்கம் என்றும் கூறும் அளவிற்கு செடிகள் உள்ளன. இவற்றை பலர் திருடி விற்பனை செய்கின்றனர். இதனால் சிறுமலைக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் அழிவின் விழிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுமலையில் தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வில் தென்னந்தியாவில் தாவர வகைகளில் 536 உயிர் தாவரங்களையும், 895 சிற்றினங்களையும் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா: சிறுமலையில் தாவரங்கள், விலங்கினங்கள் அழிவதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளை கவரவும் ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சிறுத்தைகள் விட திட்டம்: சிறுமலை பல்லுாயிர் பூங்காவில் 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதில் காட்டு மாடுகள், மான், செந்நாய், காட்டுப்பன்றி, முயல் உட்பட பல விலங்கினங்கள் உள்ளன. மான்கள் மற்றும் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. இதை தடுக்க பல்லுயிர் பூங்காவில் சிறுத்தைகளை விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘முதல்கட்டமாக சிறுமலையிலுள்ள விலங்குகளை பல்லுயிர் பூங்காவில் விடுவதற்கும், 100 வகையான மூலிகை செடிகள் அழகர்கோவில், ஆழப்புலாவில் இருந்து கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளோம். சிறுத்தைகள் நடமாடுவதற்கு தேவையான இட வசதி உள்ளதா என நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சுற்றுசூழல் பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உட்பட பலவகையான பூங்காக்கள் அமைக்க நிபுணர் குழுவிடம் கருத்து கேட்டு வருகிறோம். அவர்கள் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: