திருவள்ளுர் அருகே பள்ளி குழந்தையை கடத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அடுத்த ஏரிமேடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரன் என்பவரது மகள் தனுஸ்ரீ, மகன் அருண் ஆகிய இருவரும் அனுப்பம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகள் இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியே வந்த இளைஞன் ஒருவன் பள்ளியில் இறக்கிவிடுவதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளான். இதனை அடுத்து அவர்களை ஏற்றிக் கொண்ட வாகனம் பள்ளியை தாண்டி செல்வதை கண்ட பிற மாணவர்கள் ஆசிரியரிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து பெற்றோருக்கும், காவல் நிலையத்திலும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசாரும், கிராம இளைஞர்களும் நாலாபுறமும் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் பிறகு அந்த இரு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றித் திரிந்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அந்த இரு குழந்தைகளும் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. போலீசாரின் விசாரணையில் குழந்தையை கடத்த முற்பட்டது கேசவபுரம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா போதையில் இருப்பதால் குழந்தைகள் இருவரையும் கடத்தும் நோக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றி திரிந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: