திருவண்ணாமலை தனியார் வங்கியில் 1.16 கோடி அடகு நகைகள் மோசடி மேலாளர் உட்பட 7 பேர் கைது : சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்தது அம்பலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தனியார் வங்கியில் அடகு வைத்த 1.16 கோடி மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக, வங்கி மேலாளர் உட்பட 7 ஊழியர்களை  போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை சன்னதி தெருவில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் உயர் அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, நகை அடகு வைத்தவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கணக்குகளை முடித்திருப்பதும், வங்கி விதிமுறையை மீறி 25 லட்சத்துக்கும் அதிகமாக தனிநபர் நகைக்கடன் வழங்கியிருப்பதும், லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்த 1.16 கோடி மதிப்பிலான 3,710 கிராம் அடகு நகைகள் மாயமானதும் தெரியவந்தது.

மேலும், கடந்த மே 7ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதும் தெரியவந்தது. எனவே, வங்கியின் முதுநிலை மேலாளர் மற்றும் அனைத்து ஊழியர்கள் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என வங்கியின் விசாரணை குழு முடிவு செய்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தியிடம், வங்கியின் கோட்ட முதுநிலை மேலாளர் கே.முரளி புகார் செய்தார். இதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மோசடிக்கு கூட்டு பொறுப்பு மற்றும் உடந்தையாக இருந்த வங்கி முதுநிலை மேலாளர் கே.வி.சுரேஷ், நகைக்கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக பொறுப்பாளர் சந்தானஹரி விக்னேஷ் உட்பட 7 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Related Stories: