பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வாடும் தென்னை.. விவசாயிகள்

*உரிய இழப்பீடு உடனே வேண்டும்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் தென்னை மரங்கள் வாடுவதுடன் விவசாயிகளும், அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, ஆத்தூர், நரசிங்கபுரம், சேவுகம்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது.

இங்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பருவம் தவறிய மழை, வறட்சி, தேங்காய் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தென்னை தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் தென்னை மரங்களை அழித்து வேறு விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். மேலும் இதனை நம்பியுள்ள தென்னையிலிருந்து கயிறு தயாரித்தல் கிடுகு பின்னுதல், வீடு கூட்டும் துடைப்பான்கள், தென்னம்பாலை போன்ற பிற தொழில்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இச்சூழ்நிலையிலும் சில விவசாயிகள் தென்னை மரங்களை காப்பாற்ற விலைக்கு வாங்கி தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். 900 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ.1000 வரை விலை கொடுத்து தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர். இதுபோல் ஒருநிலைமை கடந்த 50 ஆண்டுகளில் ஒருபோதும் வந்ததில்லை என தென்னை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தென்னை விவசாயி ஒருவர் கூறியதாவது, ‘பட்டிவீரன்பட்டி பகுதியில் தொடர்ந்து பருவமழை பொய்த்து வருகிறது. வானம் மேகமூட்டமாக காட்சியளித்தாலும் மழை பெய்வது இல்லை.

தற்போதும் கூட ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயில்போல் அதிகமாக வாட்டி வதைக்கிறது. இதனால் ஏற்கனவே அதலபாதாளத்தில் உள்ள நீர்மட்டம் மேலும் சரிவடைந்துள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதேநிலை நீடிப்பதால் 1000 அடி வரை போர்வெல் அமைத்தும் சொட்டு தண்ணீர் வரவில்லை. தென்னை மரங்களுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் விட்டு வர வேண்டும். ஆனால் சொட்டு நீர்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கூட இங்கு கிடைக்கவில்லை. இதனால் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன.

சிலர் மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி காப்பாற்றி வருகின்றனர். அதுவும் கடன் வாங்கிதான். இதனால் தென்னை விவசாயிகளும், அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி தவிக்கிறோம். எனவே அரசு வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: