மாநிலங்களவை எம்பி பதவிக்கு மன்மோகன் வேட்புமனு தாக்கல்

ஜெய்ப்பூர்:  மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடுவதற்காக,  ராஜஸ்தானில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (86). இவர் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாமில் இருந்து  மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூனுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, ராஜஸ்தானை சேர்ந்த பாஜ மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி கடந்த ஜூனில் உயிரிழந்தார். இதனால், ஒரு எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிக்கு வருகிற 26ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், இந்த எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட  மன்மோகன் சிங் நேற்று இங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: