கூட்டணி ஆட்சியின்போது காங்கிரசுக்கு அடிமை வேலை பார்த்தேன்: குமாரசாமி மீண்டும் பரபரப்பு

பெங்களூரு: ‘‘மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நான் காங்கிரஸ் கட்சிக்கு  அடிமைபோன்று வேலை பார்த்தேன்,’’ என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது  மனக்குமுறலை வெளிப்படுத்தினார். கர்நாடக மாநிலத்தில்  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக இருந்தார். 17  எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அவரது ஆட்சி பெரும்பான்மை இழந்து  கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜ ஆட்சி பொறுப்பை ஏற்று முதல்வராக எடியூரப்பா  பதவி வகித்து வருகிறார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரசில் உள்ள ஒரு சில தலைவர்களே காரணம் என்று சர்ச்சை நிலவி வருகிறது. இதையடுத்து,  சில நாட்களுக்கு முன்பு மஜத நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய குமாரசாமி,  ‘நான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. மக்கள் மனதில் இடம் கிடைத்தால்  போதும். தற்போதைய அரசியல் நிலவரம் சரியில்லை,’ என்று கண்ணீருடன்  தெரிவித்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர்  அளித்துள்ள பேட்டி:கூட்டணி ஆட்சியின்போது அனைத்து  எம்எல்ஏ.க்களுக்கும், மாநகராட்சி மேயர்களுக்கும் சுதந்திரமாக செயல்பட அனுமதி  அளித்தேன். கடந்த 14 மாத ஆட்சியில் எம்எல்ஏ.க்களுக்கும் கூட்டணி  கட்சியான காங்கிரசுக்கும் அடிமைபோன்று பணியாற்றினேன்.

அப்படி இருந்தும்  அவர்கள் என் மீது குற்றம்சாட்டினார்கள். தற்போதும் அது தொடர்கிறது. இதை  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.எம்எல்ஏ.க்கள் தொகுதி  பிரச்னையுடன் என்னை சந்திக்க வந்தால் முன் அனுமதி இல்லாவிட்டாலும் அவர்களை  சந்தித்து கோரிக்கையை கேட்டறிந்தேன். சித்தராமையா ஆட்சியின் போது  செயலாற்றாத பல கோரிக்கைகளை எம்எல்ஏக்களுக்கு நிறைவேற்றி கொடுத்தேன்.  முதல்வர் பதவியை துறந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றைய அரசியல்  நல்லவர்களுக்கானதாக இல்லை. வெறுப்பு, சாதி சார்ந்த அரசியல் நடந்து  வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: