எஸ்.பி.ஐ. எழுத்தர் பணிக்கான தேர்வு முடிகள் வெளியீடு: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணால் சர்ச்சை!

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர்(clerk) பணிக்காக நடத்தப்பட்ட முதனிலை தேர்வின் முடிவுகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் எஸ்.சி., எஸ்.டி., பிரிவை விட குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதனிலை(prelims) தேர்வு, கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. 60 நிமிடங்கள் கால அளவு கொண்டதான இந்த தேர்வில், ஒரு மதிப்பெண் என்ற வீதத்தில் 100 கேள்விகள் இடம்பெற்றன. இவற்றில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகளும், நியூமரிக்கல் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும், ரீசனிங் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும் இடம்பெற்றன. 8,300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்வானது நடத்தப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வின் முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் ஒவ்வொரு பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பழங்குடியினருக்கான கட் ஆஃப் 53.75 எனவும், எஸ்.சி., ஓ.பி.சி., பிரிவுகளுக்கான கட் ஆஃப் 61.25 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மார்க் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் 28.5 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் குறைவான தேர்வர்கள் விண்ணப்பத்திருந்ததால் இப்படி குறைவான கட் ஆஃப் நிர்ணயமாகியுள்ளது என கூறப்படுகிறது. எனினும், 10% இடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மார்க் மற்ற வகுப்பினரை விட மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: