பாடபுத்தகம் வழங்காமை-ஆசிரியர் இடமாற்றம் கண்டித்து அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை: சேர்ந்தமரம் அருகே இன்று பரபரப்பு

சுரண்டை: சேர்ந்தமரம் அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதியின்மை மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கண்டித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளியை இன்று காலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கட்டாய இலவச கல்வி மற்றும் இலவச பாடநூல்கள், ஆங்கில வழி கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் நெல்லை அருகே அடிப்படை வசதியின்மை மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை பெற்றோர் முற்றுகை யிட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு:  நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.  

இதனிடையே பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை காரணமாக மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து தற்போது 120 பேர் படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளி 4ம் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் என்பவர் தேவர்குளம் அருகே பன்னீருத்து கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து பள்ளி ஆசிரியர் விஜயகுமாரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தியும் இன்று காலை மாணவ, மாணவிகளின் பெற்றோர் சுமார் 50 பேர் தங்கள் குழந்தைகளுடன் பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், அரசு பள்ளியில் பல்வேறு சலுகைககள் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

 ஆனால் இப்பள்ளியில் 2ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புகளுக்கு இதுவரை பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் சரிவர பணிக்கு வருவதில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணம் காட்டி இப்பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் எங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து சேர்ந்தமரம்  எஸ்.ஐ. ராஜேஷ் மற்றும் போலீசார் சென்று முற்றுகையிட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக கல்வித்துறை அலுவலகத்தில் புகார் மனு அளிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாடபுத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்து பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: