மும்பை எம்.டி.என்.எல். அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: தீயில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: மும்பை பாந்த்ராவில் உள்ள எம்.டி.என்.எல். அலுவலகத்தில் தீயில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எம்.டி.என்.எல். தொலை தொடர்பு அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் தீயில் சிக்கினர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம்எடிஎன்எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3வது மற்றும் 4 மாடியில் இன்று பிற்பகல் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் சிறிதாக ஏற்பட்ட தீ, பிறகு மளமளவென பரவ தொடங்கியுள்ளது. பெரும் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. மேலும், அந்த கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருந்ததாக தகவல் வெளியானது.

கட்டிடத்தின் உள்ளே பலர் சிக்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தீ அதிகரித்ததன் காரணமாக உயிர்சேதம் ஏற்பட கூடிய அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மேல்தளத்தில் இருந்த 100 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தின் காரணமாக 3 மற்றும் 4 ம் தலத்தில் இருந்த ஏராளமான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து 4ம் நிலை விபத்து என மீட்புப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: