கொழும்பு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து விமானத்தில் பக்ரைன் சென்ற பெண் சிக்கினார்: இலங்கை போலீசாரிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு செல்ல பாதுகாப்பு சோதனை முடித்துவிட்டு பக்ரைன் விமானத்தில் ஏறிய இலங்கை பெண் பிடிபட்டார்.  சென்னை சர்வதேச  விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பிற்கு கடந்த 18ம் தேதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற இலங்கையை சேர்ந்த பெண் ஆஷா ஆனந்தன்(40) என்பவர் வந்தார். கொழும்பு செல்வதற்கான டிக்கெட்டில் பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர் திடீரென, தான் வைத்திருந்த மற்றொரு டிக்கெட்டை கொண்டு கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பக்ரைன் சென்றார். இதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதற்குள் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பக்ரைன் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

Advertising
Advertising

அந்த விமானம் பக்ரைனில் தரையிறங்கியதும், ஆஷாவை மடக்கி பிடித்தனர். பின்னர் மறுநாள் அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் ஆஷாவை திருப்பி அனுப்பினர்.  சென்னை வந்த ஆஷாவை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அத்துடன் இலங்கை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 19ம்தேதி காலை 6 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஆஷாவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். இலங்கை போலீஸ் ஆஷாவை இலங்கை  விமானநிலையத்தில் கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிய இலங்கை பெண் மீது சென்னை விமான நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: