ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருவொற்றியூர்:  ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாதாவரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் தலைமையில்  போலீசார் ஆந்திர பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஆந்திர பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் பெரிய மூட்டையுடன் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக வருவதை கண்ட போலீசார், ஆட்டோவை மடக்கினர். ஆனால், ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்தது. உடனே, போலீசார் விரட்டி சென்று அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து, சோதனையிட்டனர்.

Advertising
Advertising

அப்போது, அதில் ஒரு மூட்டையில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் கம்பம் மதுரை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோட்டைச்சாமி (50) மற்றும் சென்னை வார் மெமோரியல், சத்யா நகர், காமராஜ் சாலையை சேர்ந்த  உதயகுமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சப்ளை செய்வது தெரிந்தது. இவர்கள் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Related Stories: