ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த சென்னை வாலிபர்: பொள்ளாச்சி பெண் புகார்

பொள்ளாச்சி: திருமண ஆசைகாட்டி தன்னை பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டி ரூ.56 லட்சம் பறித்ததாக சென்னை வாலிபர் மீது பொள்ளாச்சி பெண் ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சியை சேர்ந்த 37 வயதுள்ள பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்ததோடு, விவாகரத்தும் செய்துள்ளார். பின் அவர், சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சில ஆண்டுகளாக பணியாற்றியபோது அதே நிறுவனத்தில் கிஷோர்(35) என்பவரும் பணியாற்றி உள்ளார். கிஷோர் கோவையை சேர்ந்தவர் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கடந்த ஒருவருடமாக, சென்னை கிண்டியில் வாடகைக்கு ஓட்டலில் ஒரு அறை  எடுத்து சேர்ந்து தங்கியிருந்துள்ளனர். அப்போது கிஷோர் திருமண ஆசைவார்த்தை கூறி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அந்த பெண் கிஷோர் மீது, பொள்ளாச்சி மகாலிங்புரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.  புகாரில் அவர் கூறியுள்ளதாவது: சென்னையில் என்னுடன்  ஒன்றாக வேலை பார்க்கும் கிஷோர், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஆசைவார்த்தை கூறி, ஓட்டலில் தங்கிருக்கும்போது பலமுறை பலாத்காரம் செய்தார். அப்போது அவர், எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.  

மேலும், சமூக வலைதளத்தில் எனது ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் கூறி மிரட்டி, என்னிடம் இருந்து ரூ.56 லட்சம் வரை பறித்து ஏமாற்றினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வீடியோ மற்றும் புகைப்படத்தை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.  இதையடுத்து போலீசார், பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றுதல், பலாத்காரம் செய்தல், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால், இந்த வழக்கு சென்னை கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: