தமிழகத்தில் முதல்முறையாக சாதனை காரைக்குடி நகராட்சி பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றது

காரைக்குடி: தமிழகத்திலேயே முதல்முறையாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகரில் ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, 1938ல் துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 2013ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அரசுப்பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இங்கு இந்த ஆண்டு மட்டும் 350க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்த அளவுக்கு இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பள்ளி தற்போது கல்வி மேம்பாடு, பள்ளி மேலாண்மை, கழிப்பறை சுத்தம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக ஐஎஸ்ஓ 9001 2015 தரச்சான்று பெற்றுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘எங்கள் பள்ளியில்  தமிழ் வழியில் 293 பேர், ஆங்கில வழியில் 1,032 பேர் என 1,325 பேர் படிக்கின்றனர்.

Advertising
Advertising

சிறந்த அரசு பள்ளி விருது, தூய்மை பள்ளி விருது, 100 சதவீத தேர்ச்சி விருது, சிறந்த தலைமையாசிரியர் விருது, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, அகில இந்திய தலைமையாசிரியர்களுக்கான மாநாட்டில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டது என பல சிறப்புகளை பெற்றுள்ளோம். தற்போது ஐஎஸ்ஓ 9001 2015 தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இந்த சான்று பெறும் நகராட்சி பள்ளி இதுதான். பள்ளி முன்னேற்றத்துக்காக பெற்றோர் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் வரை வழங்கியுள்ளனர். இதில் இருந்து பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம். அரசு பள்ளிகளில் 5 பாடங்கள்தான் கற்பிக்கப்படும். எங்கள் பள்ளியில் கூடுதலாக கம்ப்யூட்டர் சயின்ஸ், பொது அறிவு பாடங்கள் சேர்த்து 7 பாடமாக கற்றுத்தருகிறோம். சனிக்கிழமைகளில் தையல், பேச்சு, கையெழுத்து, பொம்மை செய்தல் போன்ற இலவச பயிற்சி வழங்குகிறோம்’’ என்றார்.

Related Stories: