அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க வதேராவுக்கு 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி:  ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமலாக்கத் துறையின் மனுவுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வழங்கும்படி, டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்துள்ளார்.  லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ரபார்ட் வதேரா மீது அமலாக்கத் துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சந்தர் சேகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் வதேரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமலாக்கத் துறைக்கு பதிலளிப்பதற்கு எனது மனுதாரருக்கு கூடுதல் கால அவகாசம் தேவை. நீதிமன்ற நோட்டீஸ் வரும்போது, மனுதாரர் வெளிநாடு சென்றிருந்தார். அவர் கடந்த 11ம் தேதிதான் நாடு திரும்பினார். எனவே, அமலாக்கத் துறையின் மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி,  2 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும்,  விசாரணை செப்.26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: