மதுரை மாவட்ட ஏடிஎம் மையங்களில் அன்பாய் பேசி பணத்தை அபகரித்த புதுகை பெண்

மதுரை: மதுரை ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதாக நடித்து மோசடி செய்த புதுக்கோட்டை பெண், மேலும் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (68). இவர் கடந்த மாதம் 29ம் தேதி மேலூர் அரசுடமை வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தார். அப்போது இவருக்கு உதவி செய்தது போல் நடித்து, ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஒரு இளம்பெண் ரூ.20 ஆயிரம் மோசடி செய்தார். இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

Advertising
Advertising

இதேபோல் ஒத்தக்கடை அருகே வலசைகுளம் பகுதியைச் சேரந்தவர் முருகன் மனைவி வாசுகி (35). இவர் ஒத்தக்கடை அரசுடமை வங்கி ஏடிஎம்மில் கடந்த மாதம் 30ம் தேதி பணம் எடுக்க வந்தார். அப்போது இவருக்கு உதவி செய்வதாக வந்த பெண், ஏடிஎம்மில் இருந்து ரூ.3,500 எடுத்து கொடுத்து விட்டு, போலி ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு சென்றார். அடுத்த சில மணிநேரத்தில் வாசுகியின் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம்மில் ரூ.46 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பினார். இந்த இரு வழக்குகள் குறித்து விசாரித்தபோது, புதுக்கோட்டை, ஈவிஆர் நகரை சேர்ந்த சீதாலட்சுமி (40) மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சீதாலட்சுமி ஏற்கனவே மதுரை ஆத்திக்குளம் அங்கையற்கன்னி காலனியை சேர்ந்த பெருமாள்சாமி - சாந்தஷீலா தம்பதியிடம் கடந்த 11ம் தேதி, ரூ.35 ஆயிரம் மோசடி செய்துள்ளார். கடந்த 12ம் தேதி, மேலமாசி வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த, செல்லூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் ஏடிஎம் கார்டை அபகரித்து, அதன் மூலம் ரூ.1 லட்சத்தை திருடி உள்ளார். ஏடிஎம் மையத்தில் மோசடி செய்த இந்த பெண், சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து பாதிக்கப்பட்டவர்கள் தற்போது புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மதுரையில் ரூம் போட்டு நாள்தோறும் ஏடிஎம்களில் பணம் எடுக்க வரும் நபர்களை கண்காணித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒருவரிடம் ஏமாற்றி அபகரிக்கும் ஏடிஎம் கார்டை அதே ஏடிஎம் கிளைக்கு சென்று வேறு யாரிடமாவது கொடுத்து ஏமாற்றி உள்ளார். மாடர்னாக வந்து அன்பாக பேசி உதவி செய்வது போல், நடித்ததால் மக்களும் நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களை அணுகக்கூடாது. சந்தேகப்படும்படி இருந்தால் உடனடியாக வங்கி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: