சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரம் பா.ஜ எம்.எல்.ஏ. மகள், மருமகனுக்கு அடி உதை: நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அட்டூழியம்

அலகாபாத்: உபி.யில் சாதி மாறி திருமணம் செய்ததால் பாதுகாப்பு கோரி அலகாபாத்  உயர் நீதிமன்றத்துக்கு வந்த பாஜ எம்எல்ஏவின் மகள் சாக்‌ஷி, அவரது கணவர்  அஜிதேஷ் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  உபி.யின் பரேலி தொகுதி  எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்‌ரா உயர் வகுப்பை சேர்ந்தவர். அவரது மகள் சாக்‌ஷி,  பட்டியலினத்தை சேர்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த வாரம்  திருமணம் செய்து கொண்டார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில்  பதிவிட்டார். இந்த திருமணத்தில் ராஜேஷ் மிஸ்ராவுக்கு விருப்பம் இல்லை.  இதனால், தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.  இதையடுத்து  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி தம்பதியர் மனுத் தாக்கல்  செய்தனர். அதில், ‘சாக்‌ஷியின் தந்தையோ அல்லது போலீசாரோ தங்களை தொந்தரவு  செய்யக் கூடாது. அமைதியாக திருமண வாழ்க்கை வாழ உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சாக்‌ஷி, அஜிதேஷ் திருமணம் சட்டபூர்வமானது. எனவே உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும்’ என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  விசாரணை  முடிந்து வெளியே வந்த அவர்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் சில வழக்கறிஞர்கள்  சூழ்ந்துக் கொண்டு அடித்து உதைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனிடையே  நீதிமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த வேறொரு தம்பதியர் கடத்தப்பட்டனர்.  ஆனால் சாக்‌ஷியும் அவரது கணவரும் கடத்தப்பட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின.  இது தொடர்பாக விளக்கம் அளித்த அலகாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் அதுல்  சர்மா, ``அந்த தம்பதியர் பதேபூர் மாவட்டம் அருகே மீட்கப்பட்டனர்.  அவர்களிடம் விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: