தாம்பரத்தில் பயங்கரம் பைக்கில் வந்த 2 ரவுடிகள் பட்டப்பகலில் வெட்டி படுகொலை: சமூகவிரோதிகளுக்கு பயந்து ஊரே வீட்டில் முடங்கியது

சென்னை : தாம்பரத்தில் பட்டப்பகலில் இரண்டு ரவுடிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (எ) சின்ன அப்புனு (30). இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29). புட்டி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அற்புதம் நகர் பகுதியில் இருந்து கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதிக்கு வீடுமாறினார். இதில் நண்பர்களான பிரதீப்குமார், சுரேஷ் மீது அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன. இதில் புட்டி சுரேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் குண்டாஸ் வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த  சிலநாட்களாக பிரதீப்குமாருக்கும் அற்புதம் நகர் மற்றும் கடப்பேரி பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை கொலை செய்யும் எண்ணத்துடன் பிரதீப்குமார், அவரது அண்ணன் பெரிய அப்புனு (எ) பிரவீன் குமார், அவரது நண்பர்கள் மணிகண்டன் (எ) கோல்ட் மணி, புட்டி சுரேஷ் ஆகியோர் கத்தி உள்ளிட்ட பயங்கர  ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித்திருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடப்பேரி அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களது பின்னால் வந்த லாரிக்கு அவர்கள் வழி விடாதபடி சென்றதால் கடப்பேரி பகுதியை சேர்ந்த அந்த லாரி டிரைவர் ரங்கநாதன் அவர்களிடம் வழி விட்டு செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகின்றது.அப்போது பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரங்கநாதனிடம் வீண் தகராறில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ரங்கநாதனின் உறவினர் காக்கா முட்டை (எ) பாபு நேற்று முன்தினம் மதியம்  பிரதீப்குமாரின் தந்தை சுகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதீப்குமார் அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் நேற்று காலை பிரதீப்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.ஆனால் பிரதீப்குமார் தலைமறைவாக இருந்ததால் அவரது மனைவி நதியாவை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பிரதீப்குமார் அவரது நண்பர் சுரேசுடன் தன்  வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவரையும் அற்புதம் நகர், கலங்கள் தெருவில்  வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அப்போது அதை பார்த்த மக்கள் அங்கிருந்து உயிர் தப்ப ஓடினர். பிரதீப்குமார், சுரேஷ் ஆகியோர் உயிர் தப்ப ஓடியபோது அவர்களின்  தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியதில் பிரதீப்குமார், சுரேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த பிறகே கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென் சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலைக்கான காரணம்?

கொலை நடந்த பகுதியில் கடந்த சிலநாட்களாகவே இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், தற்போது கொலை செய்யப்பட்ட இருவரும் அவரது நண்பர்களுடன் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து  வந்ததும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.பெரும்பாலும் தேவையில்லாமல் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளனர். பிரதீப்குமார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது வயிற்று பகுதியில் பெரிய கத்தியை மறைத்து வைத்திருந்ததை பார்த்தபோது அவர்களது  எதிரிகளை கொலை செய்வதற்காகவே அவர்கள் சுற்றித்திரிந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்கள் அவர்களை கொலை செய்வதற்குள் எதிர்தரப்பினர் முந்திக் கொண்டு இவர்களை கொலை செய்துள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள்  தெரிவித்தனர்.

சமூக விரோத செயல்களுக்கு வசதியாக

பதற்றமான பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பர்மா காலனி, புலிக்குரடு ஆகிய பகுதிகள்  முழுவதும் வனத்துறை பகுதி. இந்த பகுதியில் கடப்பேரி மலை உள்ளது. அதுமட்டுமின்றி தாம்பரம் - திருநீர்மலை சாலையில் பர்மா காலனி அருகே இருபுறமும் காடுகளாக இருப்பதால், இது சமூக விரோத செயல்களுக்கு வசதியாக உள்ளது.  இங்கு வரும் சமூக விரோதிகள் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு சாலையில் செல்லுபவர்களிடம் வீண் தகராறு செய்வதும், வழிப்பறிகளில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு வரும் பெண்களிடம் தகாத முறையில்  ஈடுபடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தாம்பரம் போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் இல்லை. அதுமட்டும் இன்றி போலீசார் இப்பகுதிகளில் ரோந்து பணிகளில்  ஈடுபடுவதே இல்லை. இதனால் தினமும் பல சமூகவிரோத செயல்கள் இப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டு தான் வருகின்றது.

அட்டகாசம்

கொல்லப்பட்ட புட்டி சுரேஷ், சின்ன அப்புனு (எ) பிரதீப்குமார், அவரது அண்ணன் பெரிய அப்புனு (எ) பிரவீன்குமார், மணிகண்டன் (எ) கோல்ட் மணி ஆகியோர் பர்மா காலனி காட்டு பகுதியில் கஞ்சா, மது ஆகியவற்றை பயன்படுத்துவது  மட்டுமில்லாமல், அப்பகுதியில் அவர்கள் செய்யாத அட்டூழியமே இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே இனிமேலாவது இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை உயரதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: