தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஒரு நபர் விசாரணை ஆணையத்திடம் ஆதார சிடி... முகிலன் மீட்பு கூட்டியக்கம் வழங்கல்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  நீதிபதி அருணா ஜெகதீசனிடம் முகிலன்  மீட்பு கூட்டியக்கத்தினர் ஆதாரங்கள் அடங்கிய சிடியை வழங்கினர். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து ஏற்கனவே சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பத்தினர், காயம் அடைந்தோர், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் 11 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதில் 320 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆணையத்தின் 12ம் கட்ட விசாரணை நேற்று முன்தினம் துவங்கியது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தினமும் 10 பேர் வீதம் விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தை சேர்ந்த மாரிச்செல்வம், கிதர்பிஸ்மி, கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோர் விசாரணைக்கு நேற்று ஆஜராகினர். அப்போது அவர்கள், சென்னையில் இருந்து ரயிலில் பயணித்தபோது மாயமான சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்ட துப்பாக்கி சூடு குறித்த ஆவணங்கள் அடங்கிய சிடியை ஒரு நபர் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். விசாரணை தொடர்ந்து நாளை (21ம்தேதி) வரை நடக்கிறது.

Related Stories: