மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை

பெங்களூரு: மக்களவை தேர்தலில் தோல்வியைதொடர்ந்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும்  நோக்கத்தில் தலைவர், செயல் தலைவர் பதவிகளை தவிர மற்ற அனைத்து  நிர்வாகிகளையும் கூண்டோடு கலைத்து கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை  எடுத்துள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இதில் காங்கிரஸ் - மஜத இரு கட்சிகளும் தலா ஒரு இடம் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் - மஜத தொண்டர்கள் இடையே நல்லிணக்கம் இல்லாதது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பணியை சரிவர செய்யாமல் தான்தோன்றிதனமாக நடந்து கொண்டது ஆகியவையே தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில்,  டெல்லியில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் ராகுல் காந்தி  தலைமையில் இரண்டு நாட்கள் நடந்தது. அதில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட  தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கட்சி பொறுப்பில்  உள்ளவர்கள், தங்கள் கடமையை உணர்ந்து செயல்படவில்லை. லெட்டர்பேடு மற்றும்  விசிட்டிங் கார்டு தலைவராக மட்டுமே உள்ளனர். மேலும் கர்நாடக மாநில  காங்கிரசில் கடந்த 10 ஆண்டுகளாக தலைவர், செயல் தலைவர் பதவியில் மட்டுமே  மாற்றம் ஏற்படுத்தப்பட்டதே தவிர, பிற நிர்வாகிகள் மாற்றாமல் அப்படியே  உள்ளனர். கட்சி நிர்வாகத்தில் தற்போதுள்ளவர்களை மாற்றிவிட்டு  இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும் என்ற கருத்தை  சித்தராமையா உள்பட மாநிலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் எடுத்து கூறினர்.

அதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநில தலைவராக  இருக்கும் தினேஷ்குண்டுராவ், செயல் தலைவராக இருக்கும் ஈஸ்வர் கண்ட்ரே  ஆகியோர் வகித்துவரும் பதவிகளை தவிர 176 செயலாளர்கள் உள்பட அனைத்து  நிர்வாகிகளையும் கூண்டோடு கலைத்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கட்சியின் தேசிய  பொதுசெயலாளரும்,கர்நாடக மாநில பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால்  அதிகாரபூர்வமான அறிக்கையாக வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் நிர்வாகம் கூண்டோடு  கலைக்கப்பட்டுள்ளதால், விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம்  செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைகளில் சிக்கிய எம்எல்ஏ ரோஷன் பெய்க் சஸ்பெண்ட்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைய சித்தராமையாவே காரணம் என்று சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி, பாஜ மாநில தலைவர் எடியூரப்பா ஆகியோரை புகழ்ந்து பேசியது மட்டுமின்றி சிறுபான்மையினர் காங்கிரசை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது என்று விமர்சித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இவரது நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ரோஷன் பெய்க், உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையில் சிவாஜிநகர் ஐஎம்ஏ நிதி நிறுவன முறைகேட்டில் இவரது பெயர் அடிபட்டது. இதைத்தொடர்ந்து இவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: