காங்கிரஸ், தேஜ கூட்டணி கட்சிகள் ஆதரவு மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா: இன்று ஒருமனதாக தேர்வாகிறார்

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் வேட்பாளராக, பாஜ.வை சேர்ந்த எம்பி.யான ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ கூட்டணிக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் சபாநாயகராக ேதர்வு செய்யப்படுவது உறுதி. எதிர்க்கட்சிகள் சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த எம்பி.யான ஓம் பிர்லாவை (57),  சபாநாயகர் வேட்பாளராக பாஜ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோடாப்பண்டி தொகுதியில் இருந்து எம்பி.யாக தேர்வானவர் இவர், மூன்று முறை எம்எல்ஏ.வாகவும், 2 முறை எம்பி.யாகவும் இருந்துள்ளார். பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவர். கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய துணை தலைவராக இருக்கிறார்.

 மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயர் முன்மொழியப்பட்டதற்கு பிஜு ஜனதா தளம், சிவசேனா, அகாலி தளம், தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி, லோக் ஜனசக்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறவில்லை என்ற போதிலும், பாஜ வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் ஓம் பிர்லாவிற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதே நேரம், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இன்று நடைபெறும் தேர்தலில் ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

Related Stories: