கருப்பு பண விவகாரம் 50 இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டது சுவிஸ் அரசு

புதுடெல்லி: தனது நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 50 இந்தியர்களின் பட்டியலை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு வழங்கியுள்ளது. மேலும், பலரின் பெயர்களை வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, ‘எனது தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தால், சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்’ என வாக்குறுதி அளித்தார். இதன் மூலம், கணக்கில் வராத வருமானம், சொத்துகள்  கண்டறியப்பட்டு வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

சட்ட விரோத நிதி மோசடி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள இந்தியர்கள் மீதான பிடியை இறுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை கேட்டு அந்நாட்டு அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த 2016 நவம்பரில் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி, நிதி முறைகேடு பற்றிய தகவல்களை தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் சுவிட்சர்லாந்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் ஏற்கனவே  கடந்தாண்டு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களில் 50 இந்தியர்களின் பட்டியலை அந்நாட்டு அரசு வழங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்ட தனி நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அரசு அமைப்புகள் தெரிவித்தன. இவற்றில் பெரும்பாலான நபர்கள், நிறுவனங்கள் கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டுள்ளன. சிலரது முழுப் பெயரும் பலரது இனிஷியலும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் கிருஷ்ண பகவான் ராம்சந்த், பொட்லுரி ராஜமோகன் ராவ், சஞ்சய் டால்மியா, அனில் பரத்வாஜ், ரத்தன் சிங் சவுத்ரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories:

>