ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய ரூ.48,000 கோடியை செலவழிக்காதது ஏன்? சென்னை உள்ளிட்ட 100 மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வேலூர்: நாடு முழுவதும் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.48 ஆயிரம் கோடி நிதியை செலவு செய்யாதது ஏன்? என்று சென்னை உள்ளிட்ட 100 மாநகராட்சிகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ள நகரங்களை தேர்வு செய்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மக்கள் நலன் சார்ந்த கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், மருத்துவம், சுகாதாரம், தொலைத்தொடர்பு, பொருளாதார கட்டமைப்புகள், வணிக வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதுகாத்தல், 24 மணிநேர குடிநீர் சேவை, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், உற்பத்தி தொழில்களுக்கு 60 சதவீதமும், சேவை மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு 40 சதவீதமும் ஒதுக்கப்படும். தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. திட்டத்தை செயல்படுத்த மொத்தம் ரூ.48 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. மாநகராட்சிக்கென ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

இதில், தமிழகத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் திருப்பூர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் சுமார் ரூ.1,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அறிவித்தபடி, ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. ஆமை வேகத்தில் நடந்துவரும் பணிகளால் ஒதுக்கப்பட்ட நிதி முடங்கிக் கிடக்கிறது.  பெரும்பாலான மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை செயல்படுத்த போதியளவில் அதிகாரிகள் இல்லை. குறிப்பாக பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் பணிகளை வேகமாக செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.48 ஆயிரம் கோடி நிதியை முழுமையாக செலவு செய்யாததற்கு விளக்கம் கேட்டு 100 மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பெரும்பாலான பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இவ்வளவு பெரிய தொகை நகரின் வளர்ச்சிக்கு மீண்டும் கிடைக்குமா? என்பது தெரியாது. கிடைத்த நிதியை ஒழுங்காக செயல்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டம் வெற்றிபெறும்’ என்றனர். கிடைத்த நிதியை ஒழுங்காக செயல்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டம் வெற்றி பெறும்.

Related Stories: