ஷிகர் தவான் 117, கோஹ்லி 82, ரோகித் 57 ரன் விளாசல் ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன் இலக்கு

லண்டன்: இந்திய அணியுடனான ஐசிசி உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 117 ரன் விளாசி அசத்தினார். கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோகித் 2 ரன் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோல்டர் நைல் கோட்டைவிட்டார். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் 7 ஓவரில் 22 ரன் மட்டுமே சேர்த்தனர்.

வலுவான தொடக்கம்: கோல்டர் நைல் வீசிய 8வது ஓவரில் தவான் 3 பவுண்டரி விளாச இந்திய அணி ஸ்கோர் வேகம் எடுத்தது. தவான் 53 பந்திலும், ரோகித் 61 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.2 ஓவரில் 127 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ரோகித் 57 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கோல்டர் நைல் வேகத்தில் கேரி வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி நிதானமாக கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய தவான் சதம் விளாசி அசத்தினார். தவான் - கோஹ்லி இணை 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது. தவான் 117 ரன் (109 பந்து, 16 பவுண்டரி) விளாசி ஸ்டார்க் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து கோஹ்லியுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட இந்திய ஸ்கோர் 300 ரன்னை தாண்டியது.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் 48 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய டோனி 27 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கோஹ்லி 82 ரன் (77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. கே.எல்.ராகுல் (11 ரன்), கேதார் ஜாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் 2, கோல்டர் நைல், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர், பூம்ராவின் துல்லியமான வேகப்பந்துவீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறிய இந்த ஜோடி முதல் 9 ஓவரில் 29 ரன் மட்டுமே சேர்த்தது. எனினும், ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் வார்னர் ஒரு பவுண்டரியும், பிஞ்ச் ஹாட்ரிக் பவுண்டரியும் விளாசிர். 10 ஓவர் முடிவில் ஆஸி. அணி விக்கெட் இழப்பின்றி 48 ரன் எடுத்தது. வார்னர் - பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 61 ரன் சேர்த்த நிலையில், பிஞ்ச் 36 ரன் எடுத்து (35 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வார்னருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்த போராடினர்.

Related Stories: