நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க கேரள அரசுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் : பிரதமர் மோடி உறுதி

குருவாயூர்: நட்டை கட்டமைக்கவே பாஜக அரசியலுக்கு வந்துள்ளதாக குருவாயூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். உலக  அரங்கில் இந்தியாவுக்கு உரியஇடத்தை பெற்றுத்தர பாஜக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க கேரள அரசு  எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். கோமாரி நோயை ஒழிக்க கால்நடைகளுக்கான  தடுப்பூசி முகாம்களை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைய கேரள அரசு மறுத்து வருவதாக தெரிவித்த மோடி,  ஆயுஷ்மான் திட்டத்தில் கேரள மக்கள்  பயன்பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன்  கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்துக்கு பின் தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களையும் பிரதமர் மோடி காணிக்கையாக செலுத்தினார். பிரதமர் மோடிக்கு கோயில்  சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.40,000 மதிப்புள்ள செவ்வாழை, மற்றும் நெய் போன்றவற்றையும் காணிக்கையாக  பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் குருவாயூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து மாலத்தீவு  புறப்பட்டு சென்றார். 2-முறையாக பிரதமராக பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: