இப்தார் விருந்து பற்றி விமர்சனம் மத்திய அமைச்சருக்கு அமித் ஷா எச்சரிக்கை

புதுடெல்லி: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தலைநகர் பாட்னாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், பாஜ.வை சேர்ந்த துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `மற்ற மத சடங்குகளில் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ளும் சிலர், தங்களின் மத சடங்குகள், சம்பிரதாயங்களை பின்பற்றவும், கடைபிடிக்கவும் ஏன் தயங்குகின்றனர்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இதைத் தொடர்ந்து பாஜ தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இது போன்று இழிவான கருத்துகளை பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட வேண்டாம் என்றும் கிரிராஜ் சிங்கை எச்சரித்தார்.

Related Stories: