சந்திரபாபு ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி

திருமலை: ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்க, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறை சட்டத்தின்படி, கடந்த 1946ம் ஆண்டு சிபிஐ அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டத்தின்படி, டெல்லியில் மட்டும் விசாரணை நடத்த சிபிஐ.க்கு அனுமதி வழங்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு அனுமதி இல்லாமல் நேரடியாக விசாரணை நடத்தவோ, சோதனைகள் நடத்தவோ சிபிஐ.க்கு அதிகாரம் கிடையாது. இதற்கு, சிபிஐ.க்கு அனுமதி அளித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். இதன்படி, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் சிபிஐ.க்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளன.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, கடந்தாண்டு ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு சிபிஐ.க்கு அளித்த இந்த அனுமதியை ரத்து செய்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்ரவாகி இருக்கிறார். சிபிஐ.க்கு தடை விதித்த சந்திரபாபுவின் உத்தரவை நேற்று இவர் ரத்து செய்தார். தனது மாநிலத்தில் சிபிஐ எங்கு வேண்டும் என்றாலும், எந்தவித அனுமதியும் இன்றி விசாரணை, சோதனை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதற்கான சட்டத் திருத்தத்தை செய்யும்படி மாநில உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: