சந்திரபாபு அரசில் வழங்கப்பட்ட அரசு கட்டுமான ஒப்பந்தங்கள் ரத்து : முதல்வர் ஜெகன் அதிரடி

திருமலை: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆட்சியின்போது வழங்கப்பட்ட அரசு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு அதிரடியாக உத்தரவிட்டது. ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி நேற்றுமுன்தினம் பதவியேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், ‘அரசு ஒப்பந்தத்தின்  கீழ் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஊழல் நிறைந்து முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தனி ஆணையம் அமைத்து, ஒப்பந்தம் வழங்குவதற்காக புதிய நிபந்தனைகள் வகுத்து, ஊழலற்ற நேர்மையான ஒப்பந்தம் வழங்கப்படும்’ என அறிவித்தார்.

இதையடுத்து, முதன்மை செயலாளர் எல்.வி. சுப்பிரமணியன் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசு  கட்டுமான   பணிகளுக்காக அழைக்கப்பட்ட ஒப்பந்த பணிகள் அனைத்தையும் ரத்து செய்வதாகவும்,  20 சதவீதத்திற்கும் குறைவான பணிகள் செய்யப்பட்டிருந்தால் அந்த பணிகளுக்கான பில் தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்தந்த துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் பிறகு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது ஒவ்வொரு அரசு கட்டுமான பணிகளுக்கும் அந்தந்த துறை அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை அனைவரின் பார்வைக்கு பிறகு ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவி ஏற்றுள்ளதால் பழைய ஒப்பந்தத்தை ரத்து  செய்திருப்பதும் பணி செய்ததற்கான தொகையை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருப்பதும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: