2-வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்பு: காந்தி, வாஜ்பாய், தேசிய போர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை

டெல்லி: 2-வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜ தனித்தே 303 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையை எட்டியது. இருப்பினும், தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை  அமைக்கிறது.டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டத்தில், இதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு  பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். தொடர்ந்து புதிய அமைச்சர்கள்  பதவி ஏற்கின்றனர். இவர்களின் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பதவியேற்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பிராந்திய கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட  நட்சத்திரங்கள் என பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளான வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான், மொரீசியஸ் நாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர். இன்று இரவு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாளை முதல் அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய  அமைச்சர்களுடம் சென்று நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், வாஜ்பாய் நினைவிடத்திற்கு வந்த  அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யாவிடம் மோடி நலம் விசாரித்தார். தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய போர்  நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

Related Stories: