திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் எல்லைக்கல்லை போட்டு முத்துநகர் எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் எல்லைக்கல்லை போட்டு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான தருணத்தில் டிரைவர் கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையை நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணியளவில் கடந்தது. அப்போது, கள்ளிக்குடி - சிவரக்கோட்டை இடையே தண்டவாளத்தின் நடுவில் வீடு மற்றும் காலிமனைகளுக்கு ஊன்றப்படும் எல்லைக்கல்லை மர்ம நபர்கள் போட்டு வைத்திருப்பது தெரிந்தது. இதனைக் கண்ட இன்ஜின் டிரைவர், உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார். மிக மெதுவான வேகத்தில் அந்த பகுதியை கடந்து சென்றார். ரயில் மோதியதில் கல் துண்டு துண்டாகச் சிதறியது. இதுகுறித்து மதுரை ரயில்வே ஸ்டேஷன் யார்டில் டிரைவர் புகார் தெரிவித்தார். அங்கிருந்து விருதுநகர், திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். கேங்மேன் செல்வம் மற்றும் விருதுநகர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து மோப்பநாய் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

நாய் தண்டவாளத்தை தாண்டி சிறிது தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் ஓடி அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் நின்று விட்டது. இதுதொடர்பாக ரயில்வே மற்றும் கள்ளிக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் நேற்று காலை திருமங்கலத்தை கடந்து கள்ளிக்குடி, விருதுநகர் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும், தண்டவாளத்தில் கல் கிடந்த இடத்தில் சிறிது வேகத்தை குறைத்தே சென்றன. கல் மீது ரயில் மோதியதில் தண்டவாளத்திற்கு சேதம் ஏற்பட்டதா என்று ரயில்வே ஊழியர்கள் சோதனை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம், கள்ளிக்குடி இடையே இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவம் ரயில்வே ஊழியர்களிடம் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. போதையில் வீசினரா?: இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் கேட்டபோது, ‘‘சம்பவம் நடந்த கள்ளிக்குடி - சிவரக்கோட்டை இடையே, தண்டவாளப் பகுதியில், மாலை, இரவு நேரங்களில் அடிக்கடி சிலர் வந்து அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அவர்களில் சிலர் இப்படி கல்லை தூக்கி போட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: