எம்எல்ஏ வீட்டின் அருகே ரசாயன திரவம் வெடித்து சிதறியதில் ஒருவர் பலி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு வயாலிகாவலில் எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீட்டின் முன்பு ரசாயன பொருள் எடுத்து சென்ற கேன் வெடித்து சிதறியதில் உதவியாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார். பெங்களூரு வயாலிகாவல் பகுதியில், கர்நாடக எம்.எல்.ஏ முனிரத்னாவிற்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் வெங்கடேஷ் (47). கடந்த 10 ஆண்டாக வெங்கடேஷ் முனிரத்னாவிடம் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனிரத்னாவின் வீட்டில் பெயின்ட் அடிப்பதற்காக வெங்கடேஷ், பல்வேறு வேலைகளை செய்து வந்தார். அப்போது பெயின்ட்டில் கலப்பதற்காக, மீத்தேல் ஈத்தேல் கெட்டேன் என்ற திரவம் தேவைப்பட்டது.

ஏற்கனவே முனிரத்தினா திரைப்படங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவரது வீட்டில் திரைப்பட சண்டை காட்சியில் செயற்கை வெடி விபத்தை ஏற்படுத்துவதற்கான மீத்தேன் ஈத்தேன் கெட்டேன் என்ற திரவம் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.  நேற்று காலை அந்த கேனில் இருந்த திரவத்தை பெயின்ட்டில் கலப்பதற்காக வெங்கடேஷ் எடுத்து சென்று கொண்டிருந்தார். குடோனில் இருந்து, முனிரத்னாவின் வீட்டை நோக்கி சென்றபோது, நுழைவாயில் பகுதியில் திடீரென்று கேன் கை தவறி கீழே விழுந்தது. இதில் மூடி திறந்து திரவம் கீழே சிந்தியது. இதை பார்த்த வெங்கடேஷ் அதை எடுக்க முயன்றபோது, திடீரென்று திரவம் தீ பிடித்து வெடித்து சிதறியது.

பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் குண்டு வெடித்துவிட்டது என்று நினைத்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். வெங்கடேஷ் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்குள் வெங்கடேஷ் உயிரிழந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திரவத்தின் மாதிரிகளை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் உயிரிழந்த வெங்கடேஷின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: