நாகர்கோவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை... கந்துவட்டி கொடுமையால் விபரீதம்?

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கந்து வட்டி கொடுமையால் தொழிலதிபர், அவரது தாய், மனைவி, மகள் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டன் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் வடசேரி எஸ்எம்ஆர்வி பள்ளி அருகில் பல்வகை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜன்ஸி நடத்தி வந்தார். பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்து வந்தார். இவரது மனைவி ஹேமா(48). மகள் ஷிவானி(21). இவர் குலசேகரத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுடன் சுப்ரமணியின் தாயார் ருக்மணியும் (72) வசித்து வந்தார். வழக்கமாக காலை 8.30 மணிக்கு ஏஜென்சியின் சாவிைய வாங்க ஊழியர்கள் சுப்ரமணி வீட்டுக்கு வருவது வழக்கம். அதுபோல இன்று காலை ஊழியர்கள் சுப்ரமணியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வெளிப்புற கேட் பூட்டப்பட்டிருந்தது. காலிங் பெல்லை நீண்டநேரம் அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து சுப்ரமணியின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது அதுவும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அருகில் உள்ள ஹேமாவின் உறவினர்களுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்ததொடர்ந்து ஹேமாவின் தந்தை மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, இடதுபக்க ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டு மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில் சுப்ரமணி, மனைவி ஹேமா, தாயார் ருக்மணி, மகள் ஷிவானி ஆகியோர் இறந்து கிடந்ததனர். இதனால் உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர். தகவல் அறிந்த ஏஎஸ்பி ஜவஹர், வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர்4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலதிபர் சுப்ரமணி உட்பட 4 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்கள் இறந்து கிடந்த கட்டில் அருகே குளிர்பான பாக்கெட்டுகளும் கிடந்தன. வீட்டில் ஏதாவது கடிதம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறாதா என போலீசார் அலசி ஆராய்ந்தனர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை. சுப்ரமணியின் வீடு 2 தளங்களை கொண்டது. மிகவும் பிரம்மாண்டமான வகையில், படுக்கை அறையில் ஏசி உட்பட ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் சுப்ரமணி இந்த வீட்டை கட்டியிருந்தார். கடன் தொல்லையால் சுப்ரமணி தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஏஎஸ்பி ஜவஹர் கூறுகையில், சுப்ரமணி உட்பட 4 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைக்கு பின்பே அவர்களுக்கு எந்தவிதமான பிரச்னை இருந்தது என்பது தெரியவரும். இதுகுறித்து வடசேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

உறவினர்கள் கூறுகையில், சுப்ரமணி யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அவரது நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் நல்ல முறையில் பழகுவார். சம்பளம் சரியாக வழங்கி வந்தார். தொழில் ரீதியாக பலரிடமும் கடன் பெற்றிருந்தார். கந்துவட்டி பிரச்னையும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடித் துடிப்பால் பரபரப்பு

சுப்ரமணியின் மகள் ஷிவானி ஹோமியோபதி டாக்டருக்கு படித்து வந்தார். அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் அருகில்தான் வசிக்கிறார். அந்த மாணவர் தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்தார். அவர் பரிசோதித்துவிட்டு ஷிவானிக்கு நாடித்துடிப்பு இருப்பதாக கூறினார். இதனால் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷிவானி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷிவானி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சடலம் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சயனைடு தின்று தற்கொலை?

தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட படுக்கை அறையில் குளிர்பானங்களுடன் வெள்ளை நிற பொடியுடன் கூடிய பாக்கெட் கிடந்தது. அது சயனைடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சயனைடு தின்று இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் உறுதியாக கூறமுடியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்கள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பெண் போலீஸ் இல்லை

தற்கொலை செய்து கொண்டவர்களில் 3 பேர் பெண்கள். ஆனால் சம்பவ இடத்துக்கு வடசேரி காவல் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் யாரும் வரவில்லை. ஆண் போலீசார்தான் வந்து விசாரணை மேற்கொண்டு பிற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குமரியில் கந்துவட்டி கொடுமை

குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகிறது. இதில் சில உயிர்களும் காவு வாங்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு. கந்து வட்டி கொடுமை காரணமாக போலீசில் பல புகார்களும் உள்ளன. சமீபத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் எஸ்பியை சந்தித்து கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கந்து வட்டி கொடுமையால் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: