நாதுராம் கோட்சே எப்போதும் தேச பக்தர் : பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

போபால் : நாதுராம் கோட்சே எப்போதும் தேச பக்தர்தான் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, அவர் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. இது தொடர்பாக போபாலில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரக்யா சிங், நாதுராமன் கோட்சே  ஒரு தேச பக்தராக இருந்தார், இப்போதும் தேசபக்தராக இருக்கிறார் இனியும் தேசபக்தராகதான் இருப்பார் என கூறினார்.

அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள் தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினை கற்றுத் தரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.நரசிம்ம ராவ், கோட்சே குறித்து பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார். கோட்சே தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாற்றாக பிரக்யா சிங் கருத்து உள்ளது என்றம், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும், தனது பேச்சுக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறியுள்ளார்.

Related Stories: