தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் கமலுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

மன்னார்குடி: தமிழகத்தில் கமலை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் நேற்று திருச்சி ஸ்ரீ ரங்கம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசப்பக்தியை காட்டுகிறது. பிரிவினை வாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தியை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

ஆனால், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது  தவறுதான். தற்போது ஐ.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து கொண்டு கமல் இந்துக்களை தீவிரவாதி என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இதேபோல், அவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசினால் தமிழகத்தில் நடமாட விட மாட்டோம். இனி கமல் எங்கு சென்றாலும் அவரை இந்து மக்கள் சும்மா விட மாட்டார்கள். நாங்களும் சும்மா விட மாட்டோம்’ என்றார்.

தடை விதிக்க தமிழிசை கோரிக்கை: தூத்துக்குடியில் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டியில், எந்த மதமும் தீவரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் நடிகர் கமல் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசிய பேச்சுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது கவலையாக உள்ளது.

கமல்ஹாசன் இப்படி பேசுவதை பார்த்தால் அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்ற ஐயம் உள்ளது. இடைத்தேர்தலில் இதை பேச வேண்டிய அவசியம் இல்லை.  வட இந்தியாவில் பிரிவினைவாதமாக பேசிய காரணத்தால் சிலர் பிரசாரம் தடை செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி வழக்கு:

தேனி மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராதாகிருஷ்ணன் போடி சப்-கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில் கமல்ஹாசன், கோட்சே முதல் இந்து தீவிரவாதி என பேசியதற்காக அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வன்முறையை தூண்டும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார்.

தன் பொறுப்பை மறந்து, பதவி ஏற்கும்போது உறுதியளித்த சத்திய பிரமாண வாக்குமூலத்தை மீறி அமைச்சர் செயல்பட்டிருக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் பதற்றமும், இரு கட்சியினரிடையே வன்முறையை தூண்டும் நிலையும் உள்ளது. இது இந்திய தண்டனை சட்டம் இபிகோ 294 (பி) 153(எ) 506(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: