ஓட்டல் தொழிலில் உள்ளோர் உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும்: ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: ஓட்டல் தொழில் செய்வோர் பசுமை சார்ந்த விஷயங்கள், உணவுப் பொருட்களை வீணாக்காமல் தவிர்ப்பதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னையில் சிறந்த ஓட்டல் செயல்பாட்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அத்துடன் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் விவரங்கள் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார்.

அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:

சென்னை ஓட்டல்கள் சங்கம் கடந்த 1919ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை நகரம் ஓட்டல் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

பயணம் செல்வோர், சுற்றுலா செல்வோருக்கு ஓட்டல்கள்தான் தங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தருவதாக உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டல்கள் மூலம் கிடைக்கும் வசதிகள் திருப்திகரமாக இல்லை என்றால் அதற்கு பிறகு யாரும் அந்த ஓட்டலில் மறுமுறை தங்க வரமாட்டார்கள்.

தகவல் தொழில் நுட்பமும் ஓட்டல் தொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்றன. ஓட்டல்கள் பற்றிய விவரங்களை நாம் தொழில் நுட்ப வசதிகளான இணைய தளங்கள் மூலம் தான் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு இணைய தளங்கள் மூலம் ஓட்டல்களில் நமக்கு வேண்டிய அறைகளை வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யவும், தேவையில்லை என்றால் அவற்றை ரத்து செய்துவிடவும் முடியும்.

சிறப்பான சேவை செய்து வரும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் விருது பெற்றுள்ளனர். அத்துடன் ஓட்டல்கள் மற்றும் இந்த சங்கத்தின் உரிமையாளர்களின் விவரங்கள் அடங்கிய புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பசுமை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது, உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பது போன்றவற்றை இந்த தொழிலில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழிலுக்கு வருவோருக்கும் வழிகாட்டவும் வேண்டும்.

Related Stories: