நண்பேன்டா... முதலையை கல்லால் அடித்து நண்பனை காப்பாற்றிய சிறுவர்கள்

வதோதரா: குஜராத்தில் சிறுவனை ஆற்றுக்குள் இழுத்து சென்ற முதலையை கல்லால் தாக்கி அவனது நண்பர்கள் காப்பாற்றியுள்ளனர். குஜராத்தின் சபர்கந்தாவில் உள்ள குன்பாக்ஹராய் என்ற கிராமத்தை சேர்ந்தவன் சந்தீப் கமலேஷ் பார்மர்(14). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களோடு ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடுவதற்காக சென்றார்.

ஆற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, முதலை ஒன்று திடீரென சந்தீப்பீன் காலை பற்றி இழுத்துள்ளது. முதலையின் பற்கள் காலில் ஆழப்பதிந்த நிலையில் சந்தீப் அலறி கூச்சலிட்டுள்ளான். இதனை பார்த்த அவனது நண்பர்கள் அருகில் கிடந்த பெரிய கற்களை எடுத்து முதலை மீது வீசி அதனை தாக்கியுள்ளனர். இதனால் முதலை சந்தீப்பின் காலை விடுத்து ஆற்றுக்குள் சென்றுவிட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட சந்தீப் கேத்பிரம்பா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனது கால் எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தீப் மேல் சிகிச்சைக்காக ஹிமாத் நகர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். மகனின் கால் பாதிக்கப்பட்டாலும், அவனது உயிரை காப்பாற்றிய நண்பர்களுக்கு சந்தீப் பெற்றோர் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.

Related Stories: