திருமறைநாதர் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினார்மேலூரில் பழமையான மாங்கொட்டை திருவிழா

* மாட்டு வண்டியில் வந்த சுவாமிகள்

மேலூர் : திருவாதவூர் திருமறைநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா நேற்று நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலின் வைகாசி பெருவிழா மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒரு அங்கமாக திருமறைநாதர்-பிரியாவிடை ஒரு பல்லக்கிலும், வேதநாயகி அம்பாள் மற்றொரு பல்லக்கிலும், பஞ்ச மூர்த்திகள் தனித் தனியாகவும் மேலூருக்கு நேற்று எழுந்தருளினர். சுவாமிகள் மேலூருக்கு எழுந்தருளும் இந்த திருவிழா ‘மாங்கொட்டை திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது.

பக்தர்கள் கூறுகையில், ‘‘இந்திய சுந்திரத்திற்கு முன்பு மேலூரில் இருந்த சிவனடியார் ஒருவர் திருவாதவூக்கு தினசரி சென்று இறைவனை வணங்கி திரும்புவது வழக்கம். இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட போது, சுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லையே என வருந்தினார். இவரது சீடராக அப்போது இருந்த மேலூர் தாசில்தார் ஒருவர், இவருக்காக மேலூரில் ஒரு சிவன் கோயில் கட்டினார். ஆனாலும் திருவாதவூர் செல்ல முடியவில்லையே என சிவனடியார் தொடர்ந்து வருத்தப்பட, அவருக்காக அங்குள்ள இறைவனை மேலூருக்கு வர வழைத்தார் தாசில்தார்.

அதனாலேயே இன்றளவும் சுவாமி மேலூருக்கு எழுந்தருளும் போது, பல்லக்கு மேலூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு தாசில்தாருக்கு முதல் மரியாதை செலுத்திய பிறகு ஊர்வலமாக ஊருக்குள் வருகிறது. வைகாசி மாதம் மாம்பழ சீசன் என்பதால், ஆரம்ப காலத்தில் சுவாமியை எதிர்பார்த்து ரோட்டின் இருபுறமும் காத்திருக்கும் பொதுமக்கள் மாம்பழத்தை சுவைத்தபடி இருப்பார்கள். திருவிழாவின் மறுநாள் பக்தர்கள் சுவைத்து போட்ட மாம்பழ கொட்டைகள் ரோட்டின் இரு புறமும் கொட்டி கிடக்கும். இதனாலேயே இத் திருவிழாவிற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது’’ என்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மே 16ல் திருக்கல்யாணமும், மே 17ல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், அறநிலைய துறை இணை ஆணையர் நடராஜன், பேஸ்கார் திரவியகுமார் செய்து வருகின்றனர்.

Related Stories: