கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமான பனை நுங்கு

*நா வறட்சி, நீர்ச்சத்து குறைவுக்கு அருமருந்து

*கனிம சத்து, சர்க்கரை அளவை சீராக வைக்கும்
Advertising
Advertising

தென்னை மற்றும் மற்ற பயன் தரும் மரங்களை பராமரிப்பது போல பனை மரத்திற்கு அதிகம் செலவிட வேண்டியதில்லை. ஒரு விதை நட்டு வைத்தால் நமது ஆயுளுக்கு பிறகும் எண்ணிலடங்கா பலனை பனை கொடுக்கும். கற்பக விருட்சம் போல பனையினால் கிடைக்கும் பலாபலன்களை பட்டியலிட முடியாத அளவிற்கு நன்மை கிடைக்கிறது. அதேபோன்று பனை மரங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.

சமைக்கப்பட்ட உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு அவற்றின் முழுமையான சத்துகள் கிடைக்கின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தில் “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம் அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”.

கோடை காலங்களில் பனைமரங்களில் கிடைக்கும் நுங்கு அபூர்வமானது. கோடையில் ஏற்படும் நாவறட்சி, நீர்சத்து குறைவு போன்றவைகளுக்கு நுங்கு சாப்பிடுவதால் பலன் கிடைக்கின்றன. சீசன் காலத்தில் பனை மரத்திலிருந்து குலைகுலையாய் சேகரிக்கப்படும் நுங்கு கோடை வெப்ப தாக்கத்தை குறைக்க கூடியதாகும். உடலுக்கு குளிர்ச்சியையும் நாவுக்கு சுவையும் தரும் பனை நுங்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவையாகும். ஆரம்ப காலங்களில் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்த பலரும் நுங்கு சாப்பிடுவதற்காகவே இன்றும் கோடை விடுமுறையில் கிராமத்துப்பக்கம் விசிட் அடிப்பது வழக்கம்.

சொந்தம் பந்தங்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு நுங்கு உள்ளிட்ட இயற்கையின் கொடைகளை ருசித்து பார்ப்பதுமே விடுமுறை பயணத்தின் நோக்கமாக இருக்கும். கடைக்கோடி கிராமங்களில், அடர்ந்து குலைதள்ளி சிரித்திருக்கும் பனை மரத்தடியில் அமர்ந்து புதிய நுங்கை பறித்து விரல் துளாவி சுவைப்பது அனைவருக்கும் விருப்பமானதாகும். மேலும் அதனை சுளை சுளையாக எடுத்து பால் பனை வெல்லம் சேர்தது சாப்பிடுவது தேவாமிர்தம் போலிருக்கும். கிராமத்தில் உள்ள வாண்டுகளுக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்பது பனை மரங்கள் நிறைந்துள்ள பகுதியிலேயே பெரும்பாலும் கழியும்.

மேலும் கோடையில் ஏற்படும் உடல் புழுக்கம் மற்றும் நீர்ச்சத்தை நிலைப்படுத்த அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கூடுதலாக நுங்கு சாப்பிடுவது பலனளிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடையில் நம் உடலில் உள்ள நீரின் அளவு விரைவாக குறைந்து விடும். இதனால் சோர்வடையும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளவும் நுங்கு பயன்படுகிறது. நாள்முழுக்க சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பனைநுங்கு பேருதவியாக இருக்கிறது.

நுங்கு கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்காரபிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கி விடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.  நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும். நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

அம்மை நோய்களுக்கு தீர்வு

பொதுவாக கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் இக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இக்காலத்தில் உடலுக்கு வலு சேர்க்க கூடிய உணவாகவும், அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய உணவாகவும் நுங்கு இருக்கிறது. எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவது நல்லது. வெப்ப தாக்கம் கோடை காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலை பாதிக்காமல் காக்கும்.

கருவுற்ற பெண்கள் செய்ய வேண்டியது

கருவுற்ற பெண்களின் வயிற்றில் குழந்தை வளர தொடங்கும் போது பல பெண்களுக்கு சாப்பிடும் உணவு செரிமானம் ஏற்படாமல் போவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படுகிறது. சரியான விகிதத்தில் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். உடல் சத்து உடல் அதிகம் வெப்பமடையும் வகையில் பணிபுரிபவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபத்தில் நீர்ச்சத்து இழப்பு மற்றும் இன்ன பிற அத்தியாவசிய சத்துகளும் உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளை மீண்டும் ஈடு செய்யும்.

கல்லீரல் நச்சு முறிப்பான்

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. நுங்கு சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும். வயிறு சம்பந்தமான நோய்கள் நுங்கு நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவென்பதால் சிறந்த ஒரு இயற்கை மலமிளக்கி உணவாக இருக்கிது. வயிறு மற்றும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் செய்கிறது. இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர், புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்ட ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.

மார்பக புற்று நோய் தடுப்பு

இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் முதன்மையாக இருப்பது மார்பக புற்று நோய் ஆகும். இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பெண்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, நுங்கையும் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். இதில் இருக்கும் “ஆன்தோசயனின்” எனப்படும் வேதி பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வாந்தி, குமட்டல் கருவுற்றிருக்கும் பெண்கள், ஒவ்வாமை பிரச்னை கொண்டவர்கள், வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படும் போதும் குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சுரப்புகளை சரி செய்து அடிக்கடி வாந்தி எடுக்கும் பிரச்னையை போக்கும்.

உடல் எடை குறைப்பு

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் நுங்கு சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது. கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதால் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண்பார்வை திறனையும் மேம்படுத்துகிறது என மருத்துவ குறிப்புகள் கூறுகிறது.

அரசு மருத்துவர் செய்யது அபுதாகீர் கூறியது

கோடை  வெப்பத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும்  பாதிக்கப்படுவர். அப்போது சிலருக்கு சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம்.  இவற்றை தவிர்க்க நுங்கு சாப்பிடலாம். இதனால் சின்னம்மையினால் ஏற்படும்  பாதிப்புகள் குறையும். உடலையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு  சின்னம்மை வராமல் தடுக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் நுங்கு உதவியாக  இருக்கும். மேலும் நுங்கு’வைரஸ் தொற்றையும்’ கட்டுப் படுத்துகிறது. வெயிலினால்  ஏற்படும் மயக்கத்தை தவிர்க்க நுங்கு அதிகம் சாப்பிடலாம். இதன் வாயிலாக   உடலின் நீர்ச்சத்து அதிகரித்து மயக்கம் வருவது குறையும்.

மேலும்  கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட செரிமானம் அதிகரித்து மலச்சிக்கல், வாயு  தொல்லை விடுபடும். நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கனிமச்சத்துகள்  மற்றும்  ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது. குளுக்கோஸ் அளவை சீராகவும், உடலை  சுறுசுறுப்புடன் வைத்து கொள்ளவும் பனை நுங்கு உதவுகிறது என்றார்.வறட்சியை  தாங்கி வளரக்கூடிய பனை மண் அரிப்பு தடுக்க கூடியது. அதனால் அரசு நிர்வாகம்  மணல் அரிப்பு ஏற்படும் ஆற்றுக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ குணங்கள் நிறைந்த  பனை மரங்களை அழிவிலிருந்து காத்து அதன் வளர்ச்சியை அதிகரிக்க தொண்டு  நிறுவனங்கள், இயற்கை சார்ந்த அமைப்புகள் முன்வர வேண்டும் என இயற்கை  ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: